திருவள்ளூர்: சாலை சீரமைப்பு பணியின்போது விபத்தில் சிக்கி பெண் பயணி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சாலை ஒப்பந்ததாரர், நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காவல்துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளரிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த 8-ம் தேதியன்று திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விபத்து நடைபெற்றது. பழைய தார் சாலையை பெயர்த்தெடுத்து விட்டு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்து வரும்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண்மணி (40) அச்சாலையில் பயணித்தபோது இருசக்கர வாகனம் நிலைத் தடுமாறி லாரியின் பின்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ஒரு நெடுஞ்சாலையை புதுப்பிக்கும் பணி நடைபெறும்போது எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தாமல், சாலையில் எவ்வித பாதுகாப்பு தடுப்பும் ஏற்படுத்தாமல் மெத்தனப் போக்குடன் இப்பணி நடைபெற்றுள்ளது.
எனவே இந்த விபத்துக்குக் காரணமான முறையில் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட சாலை ஒப்பந்ததாரர், நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர், அன்றைய தினம் பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், உயிரிழந்த பெண்மணியின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன், தமிழகத்தில் எந்த சாலை புதுப்பிக்கும்போது ஒப்பந்ததாரரின் கவனக் குறைவால் விபத்துகளோ, உயிர் சேதங்களோ ஏற்பட்டால் ஒப்பந்ததாரர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.