சென்னை: சென்னையில் உள்ள தென்பிராந்திய (தக்ஷிண பாரத்) ராணுவ அதிகாரியாக லெப்டினென்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் இதற்கு முன்பு டெல்லியில் உள்ள ராணுவ தொழில்நுட்ப திட்டங்களின் இயக்குநர் ஜெனரல் அலுவலகத்தில் தளவாட பிரிவின் அதிகாரியாக பணியாற்றி வந்தார். ராணுவத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் பிரார், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் பாலைவனங்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் பணியாற்றி உள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக் குழுவுக்கு கமாண்டராகவும் பணியாற்றி உள்ளார். முன்னதாக, பிரார் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.