விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் மகனை பார்த்ததும் கதறி அழுத தாய். 
தமிழகம்

பக்ரைனில் விபத்தில் சிக்கிய மகனை சென்னைக்கு அழைத்துவர 4 மாதமாக போராடிய தாய் - விமான நிலையத்தில் நெகிழ்ச்சியான சந்திப்பு

செய்திப்பிரிவு

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா - அழகி தம்பதி. இவர்களின் மகன்கள் வீரபாண்டி (25), அழகு பெருமாள் (22). சுப்பையா சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட வேலை செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் ஒரு கால் துண்டிக்கப்பட்டதால், தொடர்ந்து வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

குடும்ப வறுமை காரணமாக 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த வீரபாண்டி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பக்ரைனுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஸ்டோர் கீப்பராக மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், டிசம்பர் மாதம் 7-ம் தேதி பணி முடித்து அவர் தங்கியிருக்கும் விடுதிக்குச் செல்லும்போது கனரக வாகனம் மோதியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இதுபற்றி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மகனை தமிழகத்துக்கு அழைத்துவர பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால், லட்சக்கணக்கில் செலவாகும் என்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்தனர். இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவரின் மூலமாக வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விமானம் மூலம் வீரபாண்டி சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். 4 மாத போராட்டத்துக்குப் பின், சென்னை விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் வந்திறங்கிய மகனைப் பார்த்து தாயார் கதறி அழுதார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வீரபாண்டி அழைத்து செல்லப்பட்டார்.

SCROLL FOR NEXT