தமிழகம்

ஆண்டிபாளையம் வாய்க்காலில் சிக்கும் இளைஞர்கள்: திண்டாட்டத்தில் அவிநாசிபாளையம் போலீஸார்

கா.சு.வேலாயுதன்

ஆசியாவிலேயே மிகப்பெரிய பாசனத்திட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம். இது மண்டல வாரியாக முறைப்பாசனமாக பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை, மடத்துக்குளம், பொங்கலூர், பல்லடம், காங்கயம் என நீண்டு செல்கிறது. இந்த வாய்க்கால் தண்ணீர் பாசனத்திற்கென்றாலும் இந்த வாய்க்கால்களில் குளிப்பவர்கள் அடிக்கடி நீரின் வேகத்தால் இழுத்துச் செல்லப்பட்டு இறப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி அதிக மரணங்கள் திருப்பூர்-தாராபுரம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் பகுதி வாய்க்கால் சந்தித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திண்டாடி வருகின்றனர்.

திருப்பூரிலிருந்து தாராபுரம், கரூர், திருச்சி செல்லும் சாலை யில் 7 கிமீ தொலைவில் உள்ளது ஆண்டிபாளையம். இந்த கிராமத்தின் நடுநாயகமாக பிஏபி வாய்க்கால் சென்று கொண்டிருக்கிறது. இதில் தினந்தோறும் காலையிலிருந்து மாலைவரை நூற்றுக்கணக்கானவர்கள் குளிப் பது வழக்கம். குறிப்பாக, திருப்பூரை சேர்ந்த இளைஞர்கள், மது அருந்திக் கொண்டும், ஒருவருக்கொருவர் நீச்சலுக்கு பந்தயம் கட்டிக் கொண்டும் குளிக்கின்றனர்.

இவர்களில் நிறைய பேர் வாய்க்கால் தண்ணீரில் சிக்கி காணாமல் போயிருக்கின்றனர்.அடைபட்டிருக்கும் ஏதாவது ஒரு மதகில் பலர் சடலமாக கிடைத்துள்ளனர். இப்படி மட்டும் கடந்த ஆண்டில் 13 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கும் போலீஸார் மேலும் கூறியதாவது:

அவிநாசிபாளையம் போலீஸ் காவல் எல்லைக்குள் பிஏபி வாய்க்கால் உள்ளது. பொங்கலூர் தொடங்கி சம்பந்தம்பாளையம் பிரிவு வரை சுமார் 12 கிமீ தூரம் இந்த வாய்க்கால் செல்கிறது. இதற்கிடைப்பட்ட பகுதியில் இரண்டு இடங்களில் பெரிய சாலை குறுக்கிடுவதால் அந்த இடங்களில் 40 அடி ஆழத்துக்கு அமுக்குப் பால வாய்க்காலாக அமைந்துள்ளது. இங்கே குளிப்பதும், விளையாடுவதும்ஆபத்தானது. இந்த ஆண்டிபாளையம் கிராமப் பகுதியில் சாலை கடக்கும் இடத்திலும் அமுக்குப்பால வாய்க்கால் உள்ளது. எங்களின் எச்சரிக்கையை மீறி இங்கே குளித்து ஆபத்தில் சிக்குகின்றனர் என்றனர்.

வாய்க்காலில் ஓர் ஓரமாக குளித்துக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர் கூறும்போது, ‘இங்கே குளிக்க வருபவர்கள் பெரும்பாலும் உள்ளூர்காரர்கள் இல்லை. இங்கே சுற்றுப்பகுதியில் ஏராளமான கோழிப்பண்ணைகள் உள்ளன. இறந்துபோகும் கோழிகள், அதன் கழிவுகளைஇந்த வாய்க்காலில்தான் போடுகிறார்கள். இந்த தண்ணீர் சுகாதாரக் கேடாக இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே அவர்கள் குளிப்பதில்லை. திருப்பூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் வருபவர்கள்தான் குளித்து சிக்கிக் கொள்கிறார்கள்!’ என்றார்.

SCROLL FOR NEXT