சென்னை மாநகராட்சி | கோப்புப் படம் 
தமிழகம்

15 நாட்களில் ரூ.275 கோடி சொத்து வரி வசூல்: ஊக்கத் தொகையாக ரூ.6 கோடி வழங்கிய சென்னை மாநகராட்சி

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னை மாநகராட்சி கடந்த 15 நாட்களில் ரூ.275 கோடி சொத்து வரி வசூல் செய்துள்ளது. மேலும், ஊக்கத் தொகையாக ரூ.6 கோடி வழங்கி உள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 15-ம் தேதிக்குள் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத் தொகை, அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில், 2023 - 24-ம் நிதியாண்டில் 1,680 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, மாநகராட்சி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. குறிப்பாக, முதல் 15 நாட்களில் மட்டும் ரூ.300 கோடி வசூல் செய்ய திட்டமிட்டு இருந்தது. இதற்காக, வார இறுதி நாட்களில் 170 இடங்களில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதன்படி 15-ம் தேதி மாலை வரை ரூ.275 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மாநகராட்சியில், நடப்பு நிதியாண்டின் அரையாண்டில் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தினால் சலுகை கிடைக்கும். அதன்படி, பொதுமக்கள் ஆர்வத்துடன் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். 15-ம் தேதி மாலை வரை ரூ.275 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட தொகை வசூல் ஆக வாய்ப்பு உள்ளது. தற்போது வரை ரூ.6 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது" என்று அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT