சென்னை: கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகம், புதுச்சேரியின் அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் ஏப்.17-ம்தேதி முதல் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே வழக்கு விசாரணை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி வழக்குகள் காணொலி காட்சி வாயிலாகவும் நடந்து வருகிறது. இந்த சூழலில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் வரும் ஏப்.17 முதல் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கு வரும் அனைவரும் முகக் கவசம் அணிவதும், தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே வழக்கறிஞர்கள், வழக்காடிகள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்தே நீதிமன்றத்துக்குள் வர வேண்டும். வழக்கு பட்டியலில் இல்லாத வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 11 ஆயிரம் பேர் பாதிப்பு: நாடு முழுவதும் கரோனா பாதிப்பு சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், புதிய எக்ஸ்பிபி1.16 வைரஸ் திரிபு நமது நோய் எதிர்ப்பு சக்தியை மீறி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அடுத்த 4 வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே, நாட்டில் புதிதாக 11,109 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,31,064 ஆக அதிகரித்துள்ளது. 49,622 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,456 பேர் குணமடைந்துள்ளனனர். நாடு முழுவதும் சுமார் 220.66 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 132 பேர் உட்பட தமிழகத்தில் நேற்று 493 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.