கிருஷ்ணகிரி: ஊழலுடன் சேர்ந்த காங்கிரஸ் கட்சி காணாமல் போனது என பர்கூர் அருகே நடந்த நிகழ்ச்சியில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்பி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வரட்டனப்பள்ளியில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் நாடகமேடை அமைக்க பூமி பூஜையும், அதிமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு விழாவும் நேற்று நடந்தது.
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் எம்பி சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்பதே அதிமுகவின் நோக்கம். 2010-ல் நான் மக்களவை உறுப்பினராக பதவியில் இருந்தபோது, திமுகவின் ஊழலை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்பெக்ட்ரம் ஊழலை, மக்களவையில் எழுப்பி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கொள்ளையடித்தது திமுக என்று நாங்கள் சொன்னோம்.
அதற்கு உதவியாக இருந்தது காங்கிரஸ் கட்சி. ஆகவேதான் ஊழலுடன் சேர்ந்த காங்கிரஸ் கட்சி காணாமல் போனது. பிரதமர் மோடி, மக்களவை தேர்தலில் முன்வைப்பது குடும்ப அரசியலை, ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது தான்.
அதே போல் தான் விரைவில் வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி தலைமையில் நல்ல கூட்டணி அமைத்து, நாங்கள் குரல் கொடுப்பதும் குடும்ப அரசியல், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை தான்.
திமுக என்றால் அராஜகம், ஊழல், குடும்ப அரசியல். இதை தான் இன்று (நேற்று) அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளார். ஊழல் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். குடும்ப அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.