மதுரை: திமுகவினரின் சொத்து பட்டி யலை அண்ணாமலை வெளி யிட்டதை வரவேற்கிறேன். அதேபோல், அதிமுகவினரின் சொத்துப் பட்டியலையும் அவர் வெளியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அம்பேத்கர் பிறந்தநாளை யொட்டி மதுரை விமான நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்தார்.
பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டதை வரவேற்கிறேன். அவர்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பது நாட்டில் அனைவருக்குமே தெரியும்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருப்பதால், அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் புனிதர் ஆகிவிட மாட்டார்கள். அவர்களின் சொத்துப் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும். நேர்மையான வராக இருந்தால் அதிமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிடுங்கள். ஊழல் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என அறிவிப்பு வெளியிடுங்கள்.
திருமங்கலத்தில் பெண் தற்கொலை விவகாரத்தில், சம்பந்தப்பட்டோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. அது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.