ராமேசுவரம்: தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார். மறைந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் வி.கே.ஞானசீலன் குறித்த மலர் வெளியீட்டு விழா ராமேசுவரம் அருகே தங்கச்சி மடத்தில் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மலரை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட, அதை நவாஸ்கனி எம்.பி. பெற்றுக் கொண்டார்.
பின்னர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அங்கீகாரத்தை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்றைய முதலாளித்துவ தேர்தல் முறையில் எந்த ஒரு கட்சியின் உண்மையான பலத்தையும் நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காது. தற்போதைய நடைமுறையில் யார் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்கள் என்று மதிப்பீடு செய்வதே தவறானது.
தேர்தல் ஆணையம் சுதந் திரமாக செயல்பட வேண்டும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் முகவராக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அதனால் தேர்தல் ஆணையத்திடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அங்கீகாரத்தை ரத்து செய்ததை நாங்கள் எதிர்கொள்வோம். இதனால் நாங்கள் வீழ்ச்சியோ, சோர்வோ, விரக்தியோ அடைந்திட மாட்டோம். எங்கள் கட்சித் தோழர்கள் முன்னைக் காட்டிலும் தீவிரமாக அரசியல் பணியாற்றுவார்கள் என்று கூறினார்.