மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாகச் செலுத்திய பட்டுச் சேலைகள் மூலம் ரூ.5.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் பக்தர் கள் சார்பில் நேர்த்திக்கடனாகவும், கோயில் நிர்வாகம் சார்பாகவும் தினமும் பட்டுச் சேலைகள், வேட்டிகள், துண்டுகள் சாத்தப்படுகின்றன. இவ்வாறு சேகரமாகும் வேட்டி, சேலை, துண்டுகள் வாரம் ஒருமுறை கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.
அதன்படி, கோயிலுக்கு பட்டுச்சேலைகள் ஏலம் மூலம் கிடைத்த தொகை விவரத்தை மதுரையைச் சேர்ந்த மருதுபாண்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.
அதற்கான பதிலில், 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை ரூ.5 கோடியே 45 லட்சத்து 64 ஆயிரத்து 586 விற்பனை நடந்துள்ளதாகவும், இதன் மூலம் கிடைத்த வருவாய் கோயிலின் வங்கிக்கணக்கில் இருப்பு வைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.