புதுக்கோட்டை: கடல் வளத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மத்திய அரசு முயற்சி செய்வதாக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழக மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நேற்று இரவு நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.
மாநாட்டில், மாநில மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கவுதமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது: தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவக் கிராமங்களுக்கும் சென்று மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து சரிசெய்து வருகிறேன்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவள திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சிக்கிறது. இதன் நோக்கமே தமிழக மீனவர்கள் மற்றும் சிறு மீனவர்களைப் பற்றி கவலைப்படாமல் கடல் வளத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் வகையில் உள்ளது. இந்த புதிய மசோதாவை கைவிட வேண்டும் என திமுக எம்.பிக்கள் வலியுறுத்தியதால், அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காற்று வேகமாக வீசும்போதும், படகுகளை வேகமாக இயக்கும்போதும் படகுகள் கட்டுப்பாட்டை மீறி எல்லை தாண்டிச் செல்லும். அவ்வாறு செல்லும்போது இலங்கை கடற்படை கைது செய்கிறது. இது கண்டிக்கத்தக்கது. எனினும், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதி முதல்வர் வலியுறுத்தி வருகிறார்.
இங்கிருந்து இலங்கை சென்ற பாஜகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர், இலங்கை அதிபரிடம், “படகுகள் அனைத்தும் பணக்காரர்களுக்கு சொந்தமானது என்பதால் சிறைபிடிக்கப்படும் படகுகளை விடுவிக்கத் தேவையில்லை, கூலிக்கு தொழில் செய்வதால் மீனவர்களை மட்டும் விடுவிக்கலாம்” என்று கூறினார். இதைக் கண்டித்து தமிழகத்தில் பெரிய போராட்டம் வெடித்தது. எனினும், அதில் இருந்து படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது.
மீனவர்களிடம் எதை எதையோ கூறி, அவர்களை திசை திருப்பும் வகையில் பாஜகவினர் செயல்படுகின்றனர். மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கூட்டத்தை நடத்த மத்திய அரசு மறுத்து வருகிறது. நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். இம்மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீனவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள தமிழக மீனவ மக்களை பழங்குடியினர் வகுப்பில் சேர்க்க வேண்டும். மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.6 ஆயிரமாகவும், தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.8 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்க வேண்டும். பாக் நீரிணைப் பகுதியை பொதுக்கடலாக அறிவித்து, இருநாட்டு மீனவர்களையும் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். பன்னாட்டு கடல் சட்டத்தின்படி பாரம்பரிய மீனவர்கள் ஒரு நாட்டின் கடல் எல்லையைத் தாண்டி இன்னொரு நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்தால், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால், இலங்கை அரசு அத்துமீறி தாக்குவது, வலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கான வாய்ப்புகளை ஐநா வழங்கினாலும், அதை மத்திய அரசு செய்வதில்லை. வருங்காலங்களில் அத்தகைய சட்டத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசு மீது வழக்கு தொடர வேண்டும்.
கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும்போது பாதிப்புக்குள்ளானால் தமிழக அரசு இழப்பீடு வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு வழங்குவதில்லை. இதை தார்மீகக் கடமையாக கருதி மத்திய அரசு செய்ய வேண்டும். இலங்கையில் சிறைபிடித்து வைக்கப்படும் படகுகளை உடனுக்குடன் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு 5 ஆண்டுகளுக்கு மேலாகக் கிடக்கும் படகுகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை உயர்த்தித் தர வேண்டும்.
மீனவர்களுக்கான மானிய டீசலின் அளவை ஆண்டுக்கு 1,800 லிட்டரில் இருந்து 2,500 லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும். இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரியில், சாலை வரியும் உள்ளது. ஆனால், சாலையைப் பயன்படுத்தாத படகுகளுக்கும் அத்தகைய வரியை விதிப்பது முரணாக உள்ளது. எனவே, மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலில் சாலை வரியை நீக்கினால் லிட்டருக்கு ரூ.8 வீதம் மீனவர்களுக்கு மீதமாகும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.