திருப்பத்தூரில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார். 
தமிழகம்

அதிமுகவை நாசம் செய்வதுதான் ஓபிஎஸ்-ன் ஒரே நோக்கம்: கே.சி.வீரமணி

ந. சரவணன்

திருப்பத்தூர்: அதிமுகவை நாசம் செய்வது தான் ஓபிஎஸ்சின் ஒரே நோக்கம் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பத்தூர் நகர அதிமுக சார்பில், உறுப்பினர் சேர்க்கை தொடர்பான நிகழ்ச்சி திருப்பத்தூரில் உள்ள ஓட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உறுப்பினர் படிவங்களை அதிமுக நிர்வாகிகளிடம் வழங்கிப் பேசியதாவது, ''தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைப்படி, 2 கோடி உறுப்பினர்களை அதிமுகவில் சேர்ப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறையும் போது, அதிமுகவில் 17 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். அதன் பிறகு பொறுப்புக்கு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஒன்றரை கோடி பேர் அதிமுகவில் உறுப்பினர்களாக மாறினர்.

இப்போது எடப்பாடி பழனிச்சாமி, அதை 2 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறார். அதிமுகவை கந்தல், கோலமாக மாற்ற வேண்டும் என்பது தான் பன்னீர் செல்வத்தின் முக்கிய நோக்கம். அவர் திமுகவின் 'பி' அணியாக செயல்பட்டு வருகிறார். யாருக்குமே பிரயோஜனம் இல்லாத முதல்வராக 3 முறை இருந்ததைத் தவிர பன்னீர்செல்வம் செய்த பணிகள் தான் என்ன? அவரிடம் இப்போதுள்ளவர்கள் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றுக்குமே பிரயோஜனம் இல்லாதவர்கள். அதிமுகவை நாசம் செய்வது மட்டும் தான் பன்னீர்செல்வத்தின் ஒரே நோக்கம். அது ஒரு காலத்திலும் நடக்காது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதை போல இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர்.

அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கையில், நிர்வாகிகள் உண்மையாக பணியாற்ற வேண்டும். முதலில் புதிய உறுப்பினர்களிடம் இருந்து 10 ரூபாய் பெற்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த 10 ரூபாய் என்பது, புதிய உறுப்பினரின் பணமாக இருக்க வேண்டும். அவர்களிடம் எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி 10 ரூபாய் பணத்தை வாங்கி விடுங்கள். நீங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து என்னிடம் வழங்கும் போது, அது தொடர்பாக விசாரிக்கப்படும். விசாரணையில் உண்மைத் தன்மை தெரிய வரும் போது, அதாவது நீங்களாக ஏதாவது பூர்த்தி செய்து எங்களிடம் வழங்கினால், நடவடிக்கை கடுமையாக இருக்கும்.

திமுக குடும்ப கட்சியாக மாறிவிட்டது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து சந்தர்ப்ப சூழ்ச்சியால் ஆட்சிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் குடும்பத்தினருடன் சேர்ந்து தமிழ்நாட்டை கூறுபோட்டு கொள்ளை அடித்து வருகிறார். தமிழகத்தின் எதிர்காலம் அதிமுக தான் என நினைத்த பொதுமக்கள், இளைஞர்கள் தற்போது அதிமுகவில் இணைந்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார். அடுத்து வரும் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் ஆட்சி அமையும். அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். திமுகவிற்கு வாக்களித்த பொதுமக்களும், அரசு அலுவலர்களும் தற்போது அதிருப்தியில் உள்ளனர். விரைவில் மாற்றம் வரும்.'' இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT