தமிழகம்

திமுக சொத்து, ஊழல் பட்டியல் இன்று வெளியீடு: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை இன்று வெளியிடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக - திமுக இடையேயான கருத்து மோதல் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் பல துறைகள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்து வந்தார்.

இந்நிலையில், அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது. அண்ணாமலை கையில் கட்டியிருப்பது வெளிநாட்டு வாட்ச் என்றும், அது பல லட்சம் மதிப்புடையது என்றும் திமுகவினர் விமர்சித்தனர். ஆனால், அது வெளிநாட்டு வாட்ச் அல்ல, ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் தயாரிக்கப்பட்ட வாட்ச் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, இந்த வாட்ச் வாங்கியதற்கான ரசீதை அண்ணாமலை வெளியிட வேண்டும் என திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அதற்கு, வாட்ச் வாங்கியதற்கான ரசீது தன்னிடம் இருப்பதாகவும், அதை விரைவில் வெளியிடுவதாகவும் அண்ணாமலை கூறினார்.

அதோடு, ஏப்ரல் 14-ம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் இந்த ஆட்சி மட்டுமல்லாமல், கடந்த திமுக ஆட்சியிலும் நடைபெற்ற ஊழல்களையும் வெளியிட இருப்பதாக கூறினார்.

இந்நிலையில், அண்ணாமலை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவின் ஊழல் பட்டியல் நாளை (இன்று) வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, சபரீசன், செல்வி, மு.க.முத்து, மு.க.அழகிரி, துரை அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதிமாறன் ஆகியோரின் படங்களுடன் வீடியோவை வெளியிட்டு, நாளை (இன்று) காலை 10.15 மணிக்கு ‘திமுக ஃபைல்ஸ்’ வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: தியாகராயநகரில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் இந்த பட்டியலை அண்ணாமலை வெளியிட இருக்கிறார். அண்ணாமலையின் இந்த அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT