தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு குமரி மாவட்டம் தோவாளை மலர்ச் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது. 
தமிழகம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தோவாளை, ஓசூர் மலர் சந்தைகளில் பூக்கள் விலை ஏற்றம்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்/ஓசூர்: சித்திரை பிறப்பான தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று பூக்களின் விலை உயர்ந்தது.

குமரி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, சத்தியமங்கலம், உதகை, ஓசூர் மற்றும் பல இடங்களில் இருந்து வழக்கத்தை விட 50 டன்னுக்கு மேல் கூடுதலாக பூக்கள் தோவாளை சந்தைக்கு வந்திருந்தன. பூக்களை கோயில்களுக்கு மொத்தமாக ஏராளமானோர் வாங்கிச் சென்றனர்.

பிச்சிப்பூக்கள் வரத்து குறைவாக இருந்ததால் ஒரு கிலோ பூ ரூ.2,000-க்கு விற்பனை ஆனது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1,000-க்கு விற்கப்பட்டது. கிரேந்தி ரூ.60, அரளி ரூ.200, ரோஜா ரூ.100, கோழிக்கொண்டை ரூ.80, தாமரை ஒன்று ரூ.7-க்கு விற்பனையானது. பூக்கள் விலை உயர்ந்ததுடன், நல்ல வியாபாரமும் நடந்ததால் மலர் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சாமந்திப்பூ, செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு அறுவடை செய்யப்படும் பூக்களை விவசாயிகள் ஓசூர் மலர்ச் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்குச் செல்கிறது. இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஓசூர் மலர்ச் சந்தைக்கு 150 டன் பூக்கள் விற்பனைக்கு வந்தன. வரத்து குறைவால் விலை அதிகரித்து இருந்தது.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த தொடர் மழையால், நோய் தாக்கம் ஏற்பட்டு, 60 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்டது. இதனால், தமிழ்ப் புத்தாண்டையொட்டி பூக்கள் தேவை அதிகரித்தபோதும், குறைந்த அளவே விற்பனைக்குக் கொண்டு வர முடிந்தது என்றனர்.

இதுதொடர்பாக மலர் வியாபாரி மூர்த்தி ரெட்டி கூறும்போது, ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டுக்கு 300 டன் பூக்கள் ஓசூர் மலர்ச் சந்தைக்கு விற்பனைக்கு வரும். மகசூல் பாதிப்பால், நேற்று 150 டன் மட்டுமே வந்தது. வரத்து குறைந்ததால், பூக்களின் விலை உயர்ந்தது. கடந்தாண்டு இந்த சீசனில் ஒரு கிலோ சாமந்திப்பூ ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையான நிலையில், நேற்று ரூ.200 முதல் ரூ. 250 வரை விற்பனையானது.

அதேபோல, ஐஸ்வர்யா, புஸ்க்கின் ஒயிட் ரக சாமந்திப்பூ ரூ.300-க்கு விற்பனையானது. ரோஜா ரூ.100, குண்டுமல்லி ரூ.600, செண்டுமல்லி ரூ.25-க்கு விற்பனையானது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT