போடி/மேட்டூர்: பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகின்றன.
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24) ஆகியோரும், சந்தோஷ் நகரல் (25) மற்றும் சாகர் பன்னே (25) ஆகியோரும் உயிரிழந்தனர்.
இதில் யோகேஷ்குமார் தேனி மாவட்டம் தேவாரம் அருகே மூனாண்டிபட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் - ரத்தினம் தம்பதியின் 3-வது மகன் ஆவார். இவருக்கு திருமணமான 2 சகோதரிகள் உள்ளனர்.
பள்ளி படிப்பை முடித்த யோகேஷ்குமார், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். பஞ்சாப் மாநிலம் பத்திந்தா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் யோகேஷ்குமார் உட்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர். யோகேஷ்குமாரின் உடல், இன்று (வெள்ளி) டெல்லியிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு காலை 8.10 மணிக்கு கொண்டுவரப்படுகிறது. பின்னர், ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
திருமணத்துக்கு ஏற்பாடு: யோகேஷ்குமாரின் இறப்பால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள கிராம மக்கள் கூறுகையில், இவர், சிறு வயதிலிருந்தே ராணுவத்தில் சேரவேண்டும் என்ற குறிக்கோளுடன், நண்பர்களுடன் சேர்ந்து உள்ளூரில் பயிற்சி எடுத்தார். இவருக்கு பெண் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதற்காக, மே மாதம் நடைபெறும் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு வரவிருந்தார். இதற்கான விடுமுறைக்கு ஒப்புதல் பெறப்பட்டதாகவும் மொபைல் போனில் தகவல் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்குள் இப்படி ஆகிவிட்டது என்று கிராம மக்கள் வருத்தத்துடன் கூறினர்.
சேலம் ராணுவ வீரர் கமலேஷ்: மற்றொரு வீரரான கமலேஷ் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை ரவி, நெசவுத் தொழிலாளி. தாய் செல்வமணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சந்தோஷ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். 2-வது மகனான கமலேஷ் பிஏ பொருளாதாரம் படித்து விட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவப் பணியில் சேர்ந்தார்.
இவருக்கு சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், தொடர் முயற்சியால் ராணுவத்தில் சேர்ந்தார். பின்னர், பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கமலேஷ் உயிரிழந்ததைக் கேள்விப்பட்ட குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். கடந்தஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் விடுமுறையில் வீட்டுக்கு வந்துவிட்டு திரும்பி சென்றுள்ளார்.
கமலேஷ் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமில்லாமல் பனங்காடு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கமலேஷின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.