தமிழகம்

சென்னையில் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின்கீழ் 262 பேருக்கு பணி நியமன ஆணை: மத்திய இணை அமைச்சர் ஜான் பர்லா வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசுத் துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின்கீழ், 262 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னையில் நடந்த விழாவில் மத்திய சிறுபான்மைத் துறை இணை அமைச்சர் ஜான் பர்லா வழங்கினார்.

நாடு முழுவதும் உள்ள, மத்திய அரசுத் துறைகளான ரயில்வே, வருமான வரி, சுங்கம், ஜிஎஸ்டி, அஞ்சல்,பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணிகளில்10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார்.

முதல்கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு அன்றைய நாளில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று 71 ஆயிரம் பேருக்கு இந்தியா முழுவதும் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வை பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்று, அந்தந்தமாநிலங்களில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

கலந்துரையாடல்: சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய சிறுபான்மைத் துறை இணை அமைச்சர் ஜான் பர்லா பங்கேற்று, 262 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பணிக்குத் தேர்வான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் கலந்துரையாடிய மத்திய அமைச்சர், மத்திய அரசு பணிகளுக்கு தேர்வான மகிழ்ச்சியான தருணங்கள் குறித்து கேட்டறிந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகளில் சிறப்பாகச் செயல்படவும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், ஐசிஎஃப் பொது மேலாளர் பி.ஜி.மால்யா, சென்னை மண்டல பொதுமேலாளர் கணேஷ், பணியாளர்கள் நலப் பிரிவு முதன்மை தலைமை அதிகாரி ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேபோல் தெற்கு ரயில்வேயின் சார்பில் திருச்சியில் நடந்த ‘ரோஜ்கார் மேளா’ நிகழ்வில் 243 பேருக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட், பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

SCROLL FOR NEXT