உதகை: அதிகாரிகளின் கெடுபிடியால் உதகை தாவரவியல் பூங்காவில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாமல் நேற்று மீண்டும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
உதகை தாவரவியல் பூங்காவில் கால முறை ஊதியம், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் என்பன உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் கடந்த20 நாட்களாக பணி புறக்கணிப்பு, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பூங்கா தொழிலாளர்கள் பிரதிநிதிகள் வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச் சந்திரன் ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நேற்றுமுன்தினம் போராட்டக்குழு அறிவித்தது. நேற்று காலை தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னரே பணிக்கு செல்ல வேண்டுமென தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் பால சங்கர் தெரிவித்துள்ளார். இதற்கு தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்ததோடு, பணியை புறக்கணித்து பூங்காவில் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதுதொடர்பாக சுற்றுலா ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 125-வது மலர்க் கண்காட்சி மே 19 முதல், 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கென, 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் போராட்டத்தால் இந்த செடிகள் பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி காணப்படுகின்றன’’ என்றனர்.
நீலகிரி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பாலசங்கர் கூறும் போது, ‘‘மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் மற்றும் பண்ணைகளில் பணிபுரியும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் பூங்காவில் மலர்ச் செடிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், மலர்க் கண்காட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும். மேலும், பதிவேட்டில் கையெழுத்திட்டால்தான் பணிக்கு திரும்ப முடியும்’’ என்றார்.