சென்னை: தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட பாஜக முன்னாள்நிர்வாகியான நிர்மல் குமாருக்குதடை விதித்துள்ள உயர் நீதிமன்றம்,அவர் பதிவிட்டுள்ள கருத்துகளை நீக்க உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் பல்வேறு அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.
அதையடுத்து நிர்மல்குமாருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, அமைச்சருக்கு எதிராக நிர்மல்குமார் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அதை நீக்கிவிட்டால் இந்த வழக்கை வாபஸ் பெறத் தயார், என தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து நிர்மல்குமார் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி நேற்று பிறப்பித்த தீர்ப்பில், “தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சி.டி. நிர்மல்குமாருக்கு தடை விதிக்கப்படுகிறது. அவர் ட்விட்டரில் ஏற்கெனவே பதிவிட்டுள்ள அமைச்சருக்கு எதிரான ஆட்சேபனைக்குரிய கருத்துகள் அனைத்தையும் நீக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.