சென்னை: தமிழ்ப் புத்தாண்டையொட்டி கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்ப் புத்தாண்டான நாளைய தினம் (ஏப்.14) அரசு விடுமுறையாகும். அதன் பிறகு சனிக்கிழமை விடுப்பு எடுத்து, ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து 3 நாட்கள் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட வாய்ப்புள்ளது. கடந்த வாரம் கிடைத்த 3 நாட்கள் விடுமுறையில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பினர். எனவே, இந்த வாரம் வெகு சிலரே ஊருக்குச் செல்ல வாய்ப்புள்ளது.
எனினும், கூடுதல் பேருந்துகள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விரைவு பேருந்துகளில் முன்பதிவு முடிந்தவுடன், விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட கோட்டங்களில் இயங்கும் பேருந்துகள் தொலை தூரங்களுக்குச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 300 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், தேவைக்கேற்ற பேருந்துகள் குறித்த விவரங்களை முன்னரே தெரிவிக்கவும் பேருந்து நிலைய கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.