பாரம்பரியமான கர்னாடக இசை உலகில் மழலை மேதையாக அறியப்படும் ஒருசிலரில் சித்ரவீணை ரவிகிரணும் ஒருவர். அவரின் 18-வது வயதில் 24 மணி நேரம் சித்ரவீணையை வாசித்து சாதனை படைத்துள்ளார். 2003-ம் ஆண்டிலேயே ‘இரண்டாயிரம் வருடங்களில் தமிழிசை' என்னும் தலைப்பில் அமெரிக்காவிலுள்ள சான்பிரான்ஸ்சிஸ்கோ நகரில் இவர் நிகழ்த்திய இசை நிகழ்ச்சி தமிழ் இசை மரபின் தொன்மையை உலகம் முழுவதும் எதிரொலித்தது.
இந்திய செவ்வியல் இசையின் அடிப்படை விதிகளையும் மேற்கத்திய செவ்வியல் இசையின் விதிகளையும் ஒருங்கிணைத்து இவர் உருவாக்கிய மெல்ஹார்மனி இசை, உலகம் முழுவதும் இசை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இப்போதும் அமெரிக்காவின் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதற்காக சென்ற சித்ரவீணை ரவிகிரணுக்கு, பிரதமரைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. பிரதமருடனான சந்திப்பு குறித்தும் அப்போது அவருடன் பகிர்ந்து கொண்ட இசை தொடர்பான விஷயங்கள் குறித்தும் சித்ரவீணை ரவிகிரணிடம் கேட்டபோது அவர் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
பிரதமரை சந்திக்கும் திடீர் வாய்ப்பு குறித்த செய்தி உங்களுக்கு எப்படி கிடைத்தது?
அமெரிக்காவில் சாண்டியாகோ உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக சென்றிருந்தபோது, எனக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு தகவல் வந்தது. ஏப். 8-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் பிரதமருடன் ஒரு சந்திப்பை நிகழ்த்த முடியுமா என்று கேட்டனர். இந்த அழைப்பு எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக என்னுடைய கச்சேரி திட்டங்களை மாற்றிக் கொண்டு, பிரதமரை சென்னை விமான நிலையத்தில் ஏப். 8-ம் தேதி சந்தித்தேன்.
சந்திப்பு எதைக் குறித்து அமைந்தது?
மிகவும் பிரத்யேகமான அந்த சந்திப்பில் கலை, கல்வி சார்ந்த பல விஷயங்களை, அதில் அவரின் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். அண்மையில் சில மாதங்களுக்கு முன்பாக நான் செய்த இசைப் பணிகள் குறித்து கூட அவருக்கு தெரிந்திருக்கிறது. அவ்வளவு நுட்பத்துடனும் உடனுக்குடன் விஷயங்களை தெரிந்துகொண்டு, அதைப் பற்றி தெளிவாகப் பேசியது எனக்கு பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. புதிய கல்விக் கொள்கையில் இசையை நிச்சயம் சேர்க்க வேண்டும் என்பதில் நம்முடைய பிரதமர் ஆர்வமுடனும் உறுதியுடனும் இருக்கிறார்.
ஏழ்மையிலும் சமூகத்தில் பின்தங்கியிருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும் இசையைக் கொண்டு சேர்ப்பதில் பிரதமர் விருப்பமாக இருக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டிலேயே சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் இருக்கும் 31,000 குழந்தைகளுக்கு இசையின் அறிமுகத்தை நான் அளித்திருந்த விவரங்களும் அதற்காக நான் எழுதிய இசை குறித்த புத்தகம் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்த விவரங்களும் பிரதமருக்கு தெரிந்திருக்கிறது.
இங்கே நம்மிடத்தில் பலரும் இசை எல்லோருக்குமானது அல்ல என்று நினைக்கின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை இசை எல்லோருக்குமானது.
சந்திப்பின்போது தாங்கள் ஏதாவது கோரிக்கையை பிரதமரிடம் வைத்தீர்களா?
முன்பெல்லாம் அகில இந்திய வானொலி நிலையத்தில் நிலைய வித்வான்களை தேர்வு செய்து பணியமர்த்தும் வழக்கம் இருந்தது. அதன்மூலம் நடத்தப்படும் வாத்திய விருந்தா போன்ற இசை நிகழ்ச்சிகள் இசைப் பொக்கிஷங்களாக இருந்தன. நிலைய வித்வான்களை தேர்வு செய்வதை நிறுத்திவிட்டனர்.
மீண்டும் நிலைய வித்வான்களை அகில இந்திய வானொலி தேர்வு செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையை அனைத்து இசைக் கலைஞர்களின் சார்பாகவும் வைத்தேன். அப்படி சேர்க்கப்படும் கலைஞர்களைக் கொண்டு பிரதம மந்திரி இசைக் குழு தொடங்கப்பட வேண்டும் என்ற என்னுடைய ஆவலை பிரதமரிடம் தெரிவித்தேன்.