தமிழகம்

வீட்டுவசதி வாரியத்தால் தேவையின்றி நிலம் எடுக்கப்படாது: பேரவையில் அமைச்சர் முத்துசாமி உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, நீண்ட நாட்களாக எடுக்கப்படாத நிலம் தொடர்பாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இனி தேவையின்றி நிலம் எடுக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்றுகேள்வி நேரத்தில், சிங்காநல்லூர் உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் (அதிமுக) பேசியபோது, ‘‘கோவையில் வீட்டுவசதி வாரியத்துக்கு 7,000 ஏக்கர் நிலம் எடுக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் 500 ஏக்கர் நிலம் மட்டும் எடுக்கப்பட்டு, வீடுகள்கட்டப்பட்டன. எஞ்சிய நிலத்தில் அதன் உரிமையாளர்கள் அங்கீகாரம் பெற்றும், பெறாமலும் மனைபிரிவுகளை உருவாக்கி விற்பனை செய்து வருகின்றனர்.

நிலத்தை பெற்றவர்கள் தற்போது அனுமதி, வங்கிக் கடன் பெற முடியாமலும், பதிவு செய்யமுடியாமலும் உள்ளனர். வீட்டுவசதி வாரிய நடவடிக்கைகள் கைவிடப்படுவதுடன், அறியாமல் கிரயம் பெற்றவர்களுக்கு வீட்டுவசதி துறை சார்பில் விலக்கு அளிக்க வேண்டும்’’ என்றார்.

ஒழுங்கு செய்ய நடவடிக்கை: இதற்கு பதில் அளித்து அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது: கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இந்த பிரச்சினை உள்ளது. அவை அனைத்தும் வீட்டுவசதி வாரியத்தால் நீண்ட நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அப்படியே விட்டுவிட்ட இடங்கள் ஆகும்.

நீதிமன்றத்தில் உத்தரவுகளும் உள்ளன. மிக நீண்டகாலமாக இருக்கும் இப்பிரச்சினையில் ஒரு ஒழுங்குமுறை இல்லைஎன்பதை வாரியத்துக்கு திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம். முதல்வர் ஆய்வின்போதும், இதை ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். பல ஆயிரக்கணக்கான நிலங்கள் இதில் வருகிறது.

நாங்களே முடிவெடுத்தால் குற்றச்சாட்டுகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே, இதற்காக தனி குழுஅமைத்து, அவர்களது பரிந்துரைப்படி விடுவிக்கப்படும்.

வருங்காலத்தில் இதுபோன்ற சங்கடங்கள் வராமல் இருக்க, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க குழு அமைக்கப்படும். இடம் தேவைஎன்றால்தான் எடுக்க வேண்டும்.தேவையின்றி நோட்டீஸ் கொடுத்துவைக்க கூடாது என்று தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT