தமிழகம்

ஆருத்ரா நிறுவன மோசடியில் பணம் பெற்றதாக பாஜக நிர்வாகிகளுக்கு போலீஸ் சம்மன்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்து 9,255 பேர்முதலீடு செய்த ரூ.2,438 கோடியைமோசடி செய்த வழக்கில் ஆருத்ராகோல்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் உட்பட 11 பேரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்த விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரீஷ், கடந்த மாதம் 23-ம்தேதி கைது செய்யப்பட்டார். அவரை 11 நாள் காவலில் எடுத்துபோலீஸார் விசாரித்தனர். விசாரணையில் ஹரிஷ், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.84 கோடி வரை பெற்று கொடுத்துள்ளதும், ஆனால், அவருக்கு ஆருத்ரா நிறுவனத்திலிருந்து ரூ.130 கோடிகொடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

தொடர் விசாரணையில் ஹரீஷ்தன் பெயரிலும் உறவினர்கள் பெயரிலும் ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துகளை வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் சில நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும், தானே தொழில்களை தொடங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து கார், செல்போன், சொத்து ஆவணங்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாஜகவில் பதவி பெற பணம்: ஹரீஷ் ஆருத்ரா நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருந்தபோது பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில் மாநில செயலாளராக இருந்துள்ளார். பாஜககட்சியில் விளையாட்டு பிரிவில்மாநில பொறுப்பு பதவி பெறுவதற்காக முதலீட்டாளர்களுக்கு தான் திருப்பித் தர வேண்டிய பணத்திலிருந்து அக்கட்சியைச் சேர்ந்த சிலருக்கு பணம் கொடுத்ததாகவும் ஹரீஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி பணம் கொடுத்ததாக கூறப்பட்ட பல்லாவரத்தைச் சேர்ந்தபாஜக வழக்கறிஞர் பிரிவில் உள்ள அலெக்ஸ், ராணிப்பேட்டை பாஜக மாவட்ட பொறுப்பில் உள்ள டாக்டர் சுதாகர் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT