ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி அருகே சொக்கனூர் அக்ரஹாரம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஏரியின் பிரம்மாண்ட தோற்றம். 
தமிழகம்

கெங்கவல்லி அருகே வறண்ட கிராமத்துக்கு பாசன வசதி - ரூ.26 கோடியில் உருவாக்கப்படும் சொக்கனூர் அக்ரஹாரம் புதிய ஏரி

எஸ்.விஜயகுமார்

சேலம்: ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி வட்டத்தில் உள்ள சொக்கனூர் அக்ரஹாரம், நீர் பற்றாக்குறையுள்ள கிராமமாகும்.

கெங்கவல்லியை அடுத்த பச்சைமலையில் உற்பத்தியாகும் பொன்னி ஓடையானது, சொக்கனூர் அக்ரஹாரம் கிராமம் வழியாக வழிந்தோடி, சுவேத நதியில் கலந்துவருகிறது. தங்கள் கிராமம் வழியாக, பொன்னி ஓடை வழிந்தோடும் நிலையிலும், அதன் நீரை தேக்கி வைத்து, பாசனத்துக்கு பயன்படுத்த வசதியில்லாமல், அப்பகுதி விவசாயிகள் தவித்து வந்தனர்.

எனவே, பொன்னி ஓடையின் குறுக்கே புதியதாக ஏரி ஒன்றை அமைத்துத் தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

63 ஏக்கர்: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 2020 டிசம்பரில், பொன்னி ஓடையின் குறுக்கே சொக்கனூர் அக்ரஹாரம் கிராமத்தில் ரூ.26.29 கோடியில் புதிய ஏரியை உருவாக்குவதற்காக பணிகள் தொடங்கப்பட்டன. அரசு நிலம் 50 ஏக்கர் மற்றும் பட்டாதாரர்கள் 90-க்கும் மேற்பட்டோர் இலவசமாக வழங்கிய 13 ஏக்கர் நிலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி புதிய ஏரி உருவாக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நீர் வள ஆதாரத்துறை பொறியாளர்கள் கூறியது:

நீர் தேக்கும் பரப்பு 44.81 ஏக்கர்: புதிதாக உருவாக்கப்பட்டு வரும் சொக்கனூர் அக்ரஹாரம் புதிய ஏரியின் நீர் தேங்கும் பரப்பு 44.81 ஏக்கராகும். ஏரியில் 18.90 மில்லியன் கனஅடி நீர் தேக்கப்பட்டு, பாசனத்துக்கு விநியோகிக்கப்படும். இதற்காக, ஏரியில் 2 மதகுகள் அமைக்கப்பட்டு, அதில் இடதுபுற கால்வாய் 1,750 மீட்டர் நீளமும், வலதுபுற கால்வாய் 1,595 மீட்டர் நீளமும் அமைக்கப்படுகிறது.

இதன்மூலம், 446 ஏக்கர் விவசாய நிலம் நேரடி பாசன வசதி பெறுவதுடன், இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர் ஆதாரமும் பெருகும். தற்போது இப்பகுதியில் வறண்ட பாசன பயிர்களான நிலக்கடலை, பருத்தி போன்ற பயிர்கள் மட்டுமே பயிரிடப்படும் நிலையில், புதிய ஏரியால் இப்பகுதியில் முழு நீர் பாசனப் பகுதிகளாகி, பணப்பயிர்களை பயிரிடவும் வாய்ப்பு உருவாகும்.

ஏரி அமைக்கும் பணியில், கால்வாய் பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஏரிக்கு மண் கரை அமைக்கும் பணியும் வேமாக நடைபெற்று வருகிறது. 6 மாதத்துக்குள் பணிகளை முடிப்பதற்கு திட்டமிட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT