தமிழகம்

புளூவேல் விபரீத விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை: சேலம் ஆட்சியர்

வி.சீனிவாசன்

புளூவேல் விபரீத விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹினி தெரிவித்தார். புளூவேல் ஆன்லைன் விளையாட்டால் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "உலகம் முழுவதும் 12 முதல் 19 வயதுவரை இருக்கும் இளைஞர்களைக் குறிவைக்கும் இந்த விபரீத விளையாட்டுக்கு இந்தியாவில் இதுவரை 2 பேர் பலியானதாக தகவல் இருக்கின்றது. இந்நிலையில், சேலத்தில் இந்த விளையாட்டு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். இந்த விளையாட்டில் யாரேனும் சிக்கியிருக்கிறார்கள் என்ற சந்தேகம் வந்தாலே அவர்களை அழைத்து தகுந்த ஆலோசனை கொடுக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் புளூவேல் விளையாட்டு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல் பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்களிலும் இந்த விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

சில வாட்ஸ் அப் குரூப்களில் இந்த விளையாட்டு தொடர்பான லிங்க்குகள் பகிரப்படுவதாக புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரித்து வருகிறோம். அத்தகைய லிங்க்குகளை நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT