விருதுநகர்: திண்டுக்கல் மாவட்டம் மணப்பாறையில் ரயில்வே சுரங்கப் பாதை பணிகள் காரணமாக விருதுநகரிலிருந்து மாற்று வழித்தடத்தில் ரயில்கள் இன்று இயக்கப்பட்டன.
செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயில் மற்றும் குருவாயூரிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் விரைவு ரயில்கள் விருதுநகர் வழியாக தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திண்டுக்கல் - திருச்சி வழித் தடத்தில் தாமரைப்பாடி- வடமதுரை இடையே ரயில்வே சுரங்கப்பாதை பணி நடைபெற்று வருகிறது. இதனால், செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயில் இன்று காலை வழக்கம் போல் செங்கோட்டையிலிருந்து தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வழியாக விருதுநகர் வந்தடைந்தது.
ஆனால், விருதுநகரிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் வழித்தடமான திருப்பரங்குன்றம், மதுரை, திண்டுக்கல் வழியாக இந்த ரயில் இயக்கப்படாமல், விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வரை மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது. திருச்சியிலிருந்து, தஞ்சை, கும்பகோணம் மயிலாடுதுரை வரை இவ்விரைவு ரயில் இயக்கப்பட்டது. இதேபோன்று, குருவாயூரிலிருந்து சென்னை சென்ற விரைவு ரயிலும் விருதுநகர் வரை வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்பட்டது.
விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சிக்கும் பின்னர் திருச்சியிலிருந்து வழக்கமான வழித் தடத்திலும் இந்த ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. நாளை(12ம் தேதி) இதேபோன்று இந்த இரு ரயில்களும் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என ரயில்வேதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.