தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகோயில் பகுதியில் சேதமடைந்த சாலையால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு

அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அத்திகோயில் பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அத்திகோயில் பகுதி அமைந்துள்ளது. இங்கு மலைவாழ் மக்களுக்காக அரசு அமைத்துள்ள குடியிருப்பில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான கற்பரப்பளவில் மா, தென்னை, பலா உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யபட்டு உள்ளது.

இப்பகுதிக்கு செல்வதற்காக காலை, மாலை இருவேளைகளில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழை நீரானது சிறிய அருவிகள், ஓடைகள் காட்டாறு வழியாக அத்திகோயில் ஓட்டையாக அப்பகுதியில் ஓடுகிறது. இந்த ஓடை நீரானது கான்சாபுரம் வ.புதுப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

கான்சாபுரம் - அத்திகோயில் செல்லும் சாலை பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளது. மேலும் அத்திகோயில் அருகே சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே பேருந்து திரும்பி சென்று விடுகிறது. மேலும் கடந்த ஆண்டு அத்தி கோயில் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சாலையின் ஒரு பகுதியை காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. இதனால் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் முட்டைகளை வைத்து தடுப்பு அமைத்துள்ளனர்.

இதனால் விலை பொருட்களை ஏற்றி செல்வதற்காக விவசாய நிலங்களுக்கு டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். இதனால் அத்திகோயில் ஓடையில் தடுப்பு சுவர் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT