சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செயதிக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, 11-ம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12, 13, 14 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். திங்கட்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் 5 செ.மீ., தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.