உதகை தாவரவியல் பூங்காவில் போராட்டத் தின்போது மயக்கமடைந்ததால், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தோட்டக்கலைத் துறை பெண் ஊழியர்கள் . படம்: ஆர்.டி.சிவசங்கர் 
தமிழகம்

19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உதகை தாவரவியல் பூங்கா ஊழியர்கள் மயக்கம்

செய்திப்பிரிவு

உதகை: உதகை தாவரவியல் பூங்காவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் சிலர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறையில் பணிபுரியும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும், பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும், தினக்கூலியாக 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து 19-வது நாளாக உதகை தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சுருதி, அனிதா, ஷோபா ஆகிய மூன்று பெண்கள் திடீரென மயக்கமடைந்தனர். அவர்களை, உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால், பூங்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, தோட்டக்கலைத் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் கருப்புசாமி, துணை இயக்குநர்கள் சிபிலா மேரி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து வேளாண் துறை அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

வேளாண் துறை மானிய கோரிக்கையில், மீண்டும் ஊழியர்களின் கோரிக்கைகளை சட்டப்பேரவையில் அவர் பேசுவதாக தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், பிற ஊழியர்களையும் பணிக்கு திரும்ப அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், வாக்குறுதிகள் நிறைவேறும்வரை போராட்டத்தை தொடரப் போவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT