சென்னை: இந்திய கலாச்சார உறவின் மையம் எனப்படும் ஐ.சி.சி.ஆரின் 73-வதுநிறுவன நாள் விழா நேற்று முன்தினம் சென்னை டி.என்.ராஜரத்னம் கலையரங்கில் நடைபெற்றது. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத்1950-ல் டெல்லியில் ஐ.சி.சி.ஆர். அமைப்பைத் தோற்றுவித்தார்.
இதன் 73-வது நிறுவன நாள் கொண்டாட்டத்தில், தமிழ்நாடு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பேசியதாவது: ஐ.சி.சி.ஆர். வழியாக இந்தியக் கலைகளை உலகம் முழுவதும் மத்திய அரசு பரப்பி வருகிறது. அண்மையில் நடந்த ஜி-20 மாநாட்டில்கூட ஐ.சி.சி.ஆர். கலைகளின் வழியாக பண்பாட்டு நிகழ்ச்சியை, இந்தியாவின் பெருமிதத்தை உணர்த்தும் வகையில் நடத்தியது.
சென்னை சங்கமம் என்னும் பெயரில் நாட்டார் கலைகளை 60 இடங்களில் நடத்துகிறோம். கரோனா ஊரடங்கின்போதுகூட, 75-வது சுதந்திர தினத்தை கிராமியக் கலைஞர்களின் பங்களிப்போடு படம் பிடித்து, அதை டிஜிட்டல் வடிவில் இணைய வழியில் சமூக வலைதளங்களின் மூலமாக உலகம் முழுவதும் இருப்பவர்கள் பார்க்கும்படி செய்தோம்.
இந்தியக் கலைகளை வெளிநாட்டில் இருக்கும் மாணவர்களும் இங்கு வந்து கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையும், இந்தியாவில் இருக்கும் கலைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கலையைப் பரப்புவதற்கும் ஐ.சி.சி.ஆர். முக்கியப் பங்காற்றுகிறது. கலைகளின் வழியாக உலக மக்களோடு உறவுப்பாலம் அமைக்கிறது. இவ்வாறு டாக்டர் சந்திரமோகன் பேசினார்.
அரியக்குடி மியூசிக் ஃபவுண்டேஷனும், முத்தமிழ்ப் பேரவையும் ஐ.சி.சி.ஆரோடு இணைந்து நடத்திய இந்த விழாவில், வாழ்க்கையின் சுழற்சியை பக்தி நெறியோடு விளக்கும் `பரிக்ரமா' என்னும் நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. ஐ.சி.சி.ஆர். திட்ட இயக்குநர் அய்யனார், அமைப்பின் செயல்பாடுகளை விளக்கினார்.
முத்தமிழ்பேரவைத் தலைவர் குணாநிதி அமிர்தம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பிரின்ஸிபல் அக்கவுன்டன்ட் ஜெனரல் கே.பி.ஆனந்த், ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய தூதர் (ஓய்வு) திருமூர்த்தி, அரியக்குடி மியூசிக் ஃபவுண்டேஷன் தலைவர் ஜி.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.