ஆவடி: ஆவடி அருகே முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பெற்று, நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவரது கல்விச் செலவை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் ஏற்றுக்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், இவரதுமனைவி சவுபாக்யா. இத்தம்பதியின் மகள் டானியா (9) அரிய வகை முகச்சிதைவு நோய் பாதிக்கப்பட்டார். ஆகவே, தனக்கு உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வருக்கு சிறுமி டானியா கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு உடனடியாக சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, பூந்தமல்லி அருகே தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி சிறுமி டானியாவுக்கு, 8 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு முக சீரமைப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு, செப்டம்பர் மாதத்தில் சிறுமி டானியா வீடு திரும்பினார்.
முதல்வர் நலம் விசாரிப்பு: இந்நிலையில், முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த பக்கமுள்ள கண் மூடவும், பேச, சாப்பிடஎளிதாக வாய் திறக்கவும் சிரமப்பட்டு வந்தார். அதற்கு தீர்வு காண கடந்த ஜனவரி 5-ம் தேதி தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமி டானியாவுக்கு, 2-ம் கட்ட அறுவை சிகிச்சை11 மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. சில நாட்களில் சிறுமி டானியா வீடு திரும்பினார்.
தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமி டானியா வீட்டுக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். இந்நிலையில், இரு கட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு நலம் பெற்ற சிறுமி டானியா இல்லம் தேடி கல்வி மூலம் 4-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இச்சூழலில், சிறுமி டானியாவை மீண்டும் வீராபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்க நேற்று காலை மாதவரம் எம்எல்ஏஎஸ்.சுதர்சனம் தலைமையில் திமுக நிர்வாகிகள் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுமி டானியா 5-ம்வகுப்பில் சேர்க்கப்பட்டார். அப்போது, டானியா 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி கற்பதற்கான செலவை தான் ஏற்றுக்கொள்வதாக பள்ளி நிர்வாகத்திடம் உறுதியளித்த எம்எல்ஏ சுதர்சனம், 5-ம் வகுப்புக்கான கல்விக் கட்டணத்தை அப்போதே செலுத்தினார்.
பெற்றோர் மகிழ்ச்சி: இந்நிகழ்வில், திமுகவின் வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோ.தயாளன், மோரைஊராட்சி தலைவர் எஸ்.திவாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மு.சதீஷ்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். மீண்டும் பள்ளியில் சேர்ந்த சிறுமி டானியா சக மாணவர்களுடன் பேசி மகிழ்ந்து, ஆர்வமுடன் கல்வி கற்றதை பார்த்து பெற்றோர் மகிழ்ந்தனர்.