மதுரை: இஸ்லாம் மதத்துக்கு மாறிய மாணவி, கல்விச் சான்றிதழ்களில் தனது பெயரை மாற்றக் கோரும் வழக்கின் மீது, ஏப்ரல் 24-க்குள் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பி.ஸ்ருதி என்ற எம்.ஷெரின் பாய்தா என்ற பெண் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் மதுரையில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, உயர் கல்விக்காக கடந்த 2014-ல் கர்நாடகா மாநிலம் மங்களூர் பாதர் முல்லர் ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரியில் ஹோமியோபதி படிப்பில் சேர்ந்தேன். 2017-ல் இஸ்லாம் மதத்தை தழுவினேன். பின்னர், பி.ஸ்ருதி என்ற என் பெயரை எம்.ஷெரின் பாய்தா என மாற்றிக்கொண்டேன். என் பெயர் மாற்றமானது 26.4.2017-ல் அரசிதழில் வெளியானது.
இந்நிலையில், மருத்துவ மேற்படிப்புக்காக 2020-ல் நீட் தேர்வு எழுதினேன். அரசிதழ் அடிப்படையில், சான்றிதழ்களில் என் பெயர் மாற்றப்படாமலேயே பி.ஸ்ருதி என்ற பெயரில் நீட் தேர்வு எழுதினேன். அதன்பின், விநாயகா மிஷன் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன்.
பின்னர், கல்விச் சான்றிதழ்கள், கல்லூரி பதிவேடுகளில் எனது பெயரை ஷெரின் பாய்தா என மாற்றுமாறு, கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பித்தேன். ஆனால், கல்லூரியால் பெயர் மாற்றம் செய்ய முடியாது என நிர்வாகம் தெரிவித்தது.
எனவே, எனது கல்லூரிச் சான்றிதழ்கள் மற்றும் பதிவேடுகளில் எனது பெயரை, பி.ஸ்ருதி என்பதிலிருந்து எம்.ஷெரின் பாய்தா என மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் பெயர் மாற்றம் செய்வது குறித்து உரிய ஆவணங்களுடன் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? மனுதாரரின் பெயர் மாற்றம் குறித்த கோரிக்கை மீது ஏப்ரல் 24-ம் தேதிக்குள் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும், என நீதிபதி உத்தரவிட்டார்.