சென்னை லூப் சாலை | கோப்புப்படம் 
தமிழகம்

சென்னை லூப் சாலை ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்துவிடுவதாலும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும்; மாலை 4 மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

அந்த மனுவில், மீன் கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறை கோரியிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில், லூப் சாலையின் கிழக்கு பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், லூப் சாலையை பயன்படுத்துவோருக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான அமர்வில், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT