சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில், கரோனா சிகிச்சை கட்டமைப்புகள் தயார் நிலையில் இருக்கிறதா என்பது குறித்த ஆய்வு இன்று நடைபெற உள்ளது.
இதில், கரோனா நோயாளிகளைக் கையாளும் அளவுக்குத் தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், ஆக்சிஜன் இருப்பு,மருத்துவக் கருவிகள், பணியாளர்கள் உள்ளிட்டவை குறித்து மதிப்பீடு செய்யப்பட உள்ளது. மேலும், இந்த தகவல்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் ஆய்வை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிடுகிறார். இதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழுவினர், ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை பெற வேண்டிய அளவுக்கு கரோனா தொற்றின் வீரியம் இல்லை. எனினும்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு முதல்வர்அறிவுறுத்தியுள்ளார். இதையொட்டி, கரோனா மருத்துவக் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய உள்ளோம். மருத்துவமனையில் போதிய கட்டமைப்புகள் இல்லாதது கண்டறியப்பட்டால், உடனடியாக உரிய வசதிகள் செய்துதரப்படும்” என்றார்.
369 பேருக்கு கரோனா: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 189, பெண்கள் 180 என மொத்தம் 369 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 113, செங்கல்பட்டில் 37, திருவள்ளூர் மாவட்டத்தில் 19 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், விமானம் மூலம் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 172 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். தமிழகம் முழுவதும் 1,703 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை என்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.