தமிழகம்

மாணவர்கள் தற்கொலை முடிவுக்கு வரக் கூடாது: தலைவர்கள் கருத்து

செய்திப்பிரிவு

நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலை தமிழக அரசியல் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி அனிதா மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட் ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தார். ஆனால், நீட் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பை இழந்தார். நீட் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே அவர் எடுத்திருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி அனிதாவின் மரணம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.

அதன் விவரம்:

எதிர் கட்சித் தலைவர் மு.ஸ்டாலின்: மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்.

திராவிட கட்சித் தலைவர் கி. வீரமணி: அனிதாவின் மரணத்துக்கு மத்திய அரசும் , மாநில அரசும்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

போராடிதான் வெற்றி பெற வேண்டும் என்ற குணம் மாணவர்கள் மத்தியில் இருக்க வேண்டும். தற்கொலை முடிவுக்கு மாணவர்கள் வர கூடாது.

திமுக எம்.பி கனிமொழி:  நீட் தேர்வில் மாற்று என்ன வென்று தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும். மருத்துவ கல்லூரியில் படிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை. பல வாய்ப்புகள் உள்ளன. பல மாணவர்களுக்கு முழு உதாரணமாக இருந்தவர் மாணவி அனிதா. அவரின் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்: மாணவி அனிதாவின் தற்கொலை துயரமானது.

மனித வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்: அடுத்த தலைமுறைக்காக தனது உயிரை மாணவி அனிதா தியாகம் செய்துள்ளார். இதனை உணர்த்து தமிழக அரசு, தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று தர வேண்டும்.

அமைச்சர் விஜய பாஸ்கர்: மாணவி அனிதாவின் தற்கொலை வேதனை அளிக்கிறது. தற்கொலைகளை முடிவுகளை மாணவர்கள் எடுக்கக் கூடாது.

அமைச்சர் செங்கோட்டையன்: மாணவி அனிதாவின் மரணம் பெரும் இழப்பாக கருதுகிறேன். மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும்.

டிடிவி. தினகரன்: நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலை வேதனை அளிக்கிறது.

SCROLL FOR NEXT