பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் | கோப்புப்படம் 
தமிழகம்

பிரதமருக்கு கருப்புக்கொடி: கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 600 பேர் மீது வழக்குப்பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 600 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதையொட்டி, சனிக்கிழமை தமிழகம் வந்த பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு, எம்.பி.ஜோதிமணி, எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத்,தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

600 பேர் மீது வழக்குப்பதிவு: இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 600 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், சென்னை காவல் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் 600 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT