மதுரை: முதல்வரின் பிறந்த நாளையொட்டி, மதுரையில் மாட்டுவண்டி பந்தயத்தை அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழாவையொட்டி, மதுரை கிழக்கு தொகுதியில், அத்தொகுதி சார்பில், இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இன்று நடந்தது. இப்போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலர், அமைச்சருமான பி.மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். எம்எல்ஏக்கள் வெங்கடேசன், பூமிநாதன் மற்றும் மேற்கு ஒன்றிய தலைவர் வீரராகவன், மேற்கு ஒன்றியச் செயலாளர் சிறைச்செல்வன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் மாட்டு வண்டி, காளைகள் பங்கேற்றன. பெரிய மாடு ஊமச்சிகுளம் பகுதியில் இருந்து சுமார் 10கி மீ., தூரத்திலுள்ள கடவூர் லட்சுமி நகர் வரை சென்று திரும்பியது. வெற்றி பெற்ற காளைகளுக்கு திமுக மாவட்ட நிர்வாகிகள் சார்பில், பரிசுகள் வழங்கப்பட்டது.
திமுக வடக்கு மாவட்டப் பொருளாளர் சோமசுந்தரபாண்டியன் வழங்கும் முதல்பரிசு ரூ. 3 லட்சத்து 70 ஆயிரம் மற்றும் மாடும் கன்றும் பரிசாக தூத்துக்குடி சண்முகபுரம் விஜயகுமார் மாட்டுவண்டிக்கு வழங்கப்பட்டது. மாவட்ட பிரதிநிதி அழகுபாண்டி இரண்டாவது பரிசாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 70ஐ கீழவளவு சக்தி அம்பலம் மாட்டுவண்டிக்கும், மூன்றாம் பரிசாக மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார் ரூ.2 லட்சத்து 70ஐ கடம்பூர் கருணாகர ராஜா மாட்டு வண்டிக்கும் வழங்கப்பட்டது.
சிறிய மாடுகளுக்கான போட்டியில் ஊமச்சிகுளம் பகுதியில் தொடங்கி மஞ்சம்பட்டி பிரிவு வரை சுமார் 6 கிமீ., தூரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. சிறிய மாடு முதல் பிரிவில் முதல் பரிசு பெற்ற அவனியாபுரம் மோகன்குமார் மாட்டு வண்டிக்கு திமுக நிர்வாகி இருளப்பன் சார்பில், ரூ.2 லட்சத்து 70 வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு பரிசு வென்ற வெள்ளரிப்பட்டி மனோஜ் வண்டிக்கு, மேற்கு ஒன்றிய தலைவர் வீரராகவன் ரூ.1.50 லட்சத்து 70 வழங்கினார்.
மூன்றாம் பரிசு வென்ற மாட்டுவண்டிக்கு ரூ.1 லட்சத்து 70ஐ கிழக்கு ஒன்றியத் தலைவர் மணிமேகலை வழங்கினார். சிறிய மாடு இரண்டாம் பிரிவில் முதலில் வெற்றிபெற்ற காளைகளுக்கு முதல் பரிசு ஆரப்பாளையம் ஆனந்த் மாட்டுவண்டிக்கும், இரண்டாம் பரிசு தூத்துக்குடி சண்முகபுரம் விஜயகுமார் மாட்டுவண்டிக்கும், மூன்றாம் பரிசு நாட்டரசன் கோட்டை ராமையா மாட்டு வண்டிக்கும் வழங்கப்பட்டது.