சென்னை: முதல்வர் ஸ்டாலின் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பையடுத்து, நிலக்கரி ஏல அறிவிப்பில் இருந்து டெல்டா மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 பகுதிகளுக்கும் விலக்களிப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்கங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம், கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றின் கீழ், 17-வதுமற்றும் 7-வது பாக ஏலத்தை மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆணையம் கடந்த மார்ச் 29-ம் தேதி அறிவித்தது.
பிரதமருக்கு முதல்வர் கடிதம்: நாடு முழுவதும் ஏலம் விடப்பட்ட 101 பகுதிகளில், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கிழக்கு,அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த வடசேரி ஆகிய 3 தொகுதிகளும் இடம் பெற்றிருந்தன. இது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கடந்த அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையானது. இந்த தகவல் அறிந்ததும், டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு விஷயம் சென்றதும், பிரதமர் நரேந்திர மோடிக்கு உடனே கடிதம் எழுதினார். அதில், ஏல அறிவிப்பு வெளியிடும் முன், தமிழக அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை. மாநிலஅரசுடன் ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகையமுக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாகசெயல்படுவது துரதிர்ஷ்டவசமானது. எனவே ஏல அறிவிப்பை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியிருந்தார்.
மேலும், மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிடம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அளிக்கும்படி திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு அறிவுறுத்தினார். அவரும் மத்திய அமைச்சரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்து முதல்வரின் கருத்தை வலியுறுத்தினார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.
அதிமுக, மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கொண்டுவந்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசியஅனைவரும், திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர். இந்த அறிவிப்பை திரும்பப் பெறமத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என்று பாஜக சார்பிலும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம், ‘தமிழக முதல்வரின் கடிதத்துக்கு நிச்சயம் மதிப்பளிப்போம். கவலைப்பட வேண்டாம்’ எனமத்திய அமைச்சர் கூறியுள்ளார். நானும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால், எந்தக் காரணத்தை கொண்டும் தமிழக அரசுஇதற்கு நிச்சயம் அனுமதியளிக்காது’’ என தெரிவித்தார்.
இதற்கிடையே, மத்திய அரசுக்குஎதிரான எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், தமிழக பாஜக சார்பில் அதன் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியைச் சந்தித்து இந்த அறிவிப்பை திரும்பப் பெறும்படி மனு அளித் தார்.
மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு: இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பெங்களூருவில் என்னைச் சந்தித்து, நிலக்கரி சுரங்க ஏலத்தில் இருந்து 3 பகுதிகளுக்கும் விலக்களிக்க வேண்டும் என்று கோரினார்.கூட்டாண்மை உணர்வு மற்றும் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏலத்தில் இருந்து விலக்களிக்க உத்தரவிட்டுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘‘முதல்வர் ஏற்கெனவே ஏல அறிவிப்பு வெளிவந்ததும் பிரதமருக்கு நேரடியாகக் கடிதம் எழுதி அழுத்தம் தந்தார். அதன் அடிப்படையில்தான் தற்போது விலக்களிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, ‘‘அறிவிப்பு வந்ததும்,பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதி,3 இடங்களையும் ஏல அறிவிப்பில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றார். நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவை நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று கூறினார். அந்த நேரத்தில் மத்திய அமைச்சர் வெளியூரில் இருந்ததால் டி.ஆர்.பாலுவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினார்.
முதல்வர் தொடர்ந்து கொடுத்த அழுத்தம், சட்டப்பேரவையில் தெளிவாக அறிவித்ததற்கு கிடைத்தவெற்றி. அந்த அளவில் மத்திய அமைச்சரின் அறிவிப்பை நாங்கள்வரவேற்கிறோம். அதேநேரம், முதல்வர் அளித்த அழுத்தத்தை மத்திய அமைச்சர் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதை செய்யாதது வருத்தமளிப்பதாக இருந்தாலும், இந்த அளவிலாவது தமிழக மக்களின் மீது, டெல்டா விவசாயிகளின் மீது மத்திய அரசுக்கு அக்கறை வந்துள்ளது திருப்தியளிக்கிறது’’ என்றார்.
இதற்கிடையே மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.