தமிழகம்

பிரதமர் மோடி இன்று முதுமலை வருகை: 2 ஆயிரம் போலீஸார் குவிப்பு

செய்திப்பிரிவு

மசினகுடி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.9) முதுமலை வருவதையொட்டி, சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தெப்பக்காடு முதல் மசினகுடி வரை வாகன ஒத்திகை நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு பிரதமர் மோடி இன்று வருகிறார். கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பந்திப்பூர் புலிகள் காப்பகம் வரும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகிறார்.

அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு, அவற்றுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்து, யானைகளுக்கு உணவும் வழங்குகிறார். பின்னர் யானை பாகன்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடும் பிரதமர், ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதி பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டுகிறார்.

அதன்பின்னர், கார்மூலமாக தெப்பக்காட்டிலிருந்து மசினகுடி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் மைசூர் செல்கிறார். காலை சுமார் 9.30 மணியளவில் தெப்பக்காடு வரும் பிரதமர் மோடி, 10 நிமிடங்களில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மைசூர் திரும்புவது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் முதுமலை வருகையை முன்னிட்டு, முதுமலை, கூடலூர், மசினகுடி, கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, அதிவிரைவு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கூடலூர், மசினகுடி, தெப்பக்காடு உள்ளிட்ட பகுதிகள், போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. அங்கு 24 மணி நேரமும் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதிகளில் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மாநில எல்லைகளிலும், மாவட்டத்திலுள்ள சோதனைச்சாவடிகளிலும் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள், தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

இதேபோல, அங்குள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றையும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தெப்பக்காட்டிலிருந்து மசினகுடியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளம் வரை பிரதமர் செல்லும் வாகன ஒத்திகை நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

SCROLL FOR NEXT