சென்னை: போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் விவகாரம் தொடர்பாக சென்னை உட்பட 9 இடங்களில் கேரளாவிலிருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதில் ரூ.82 லட்சம், வெளிநாட்டுப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட கடலோர பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு படகு ஒன்றைக் கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதில் 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மற்றும் ‘ஏகே 47’ ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்காக நிதி திரட்டும் முயற்சியில் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். 2 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகக் கடந்த ஆண்டு திருச்சி மத்திய சிறைவளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி 9 பேரைக் கைதுசெய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் உட்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், கேரளாவிலிருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 9 இடங்களில் சோதனை நடத்தினர். குறிப்பாக குன்றத்தூர், கோவூர், பம்மல், மண்ணடி, பாரிமுனை, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடு, அலுவலகம், கடை, தங்கும் விடுதிகளில் சோதனை நடைபெற்றது.
குறிப்பாக போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை ஹவாலா பணமாக மாற்றி பல்வேறு நபர்களுக்கு சிறிய தொகையாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதா என விசாரிக்கப்பட்டது. இதில் தொடர்புடையவர்களின் பட்டியலைச் சேகரித்து அவர்களின் வங்கிக் கணக்குகள் குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, என்ஐஏ அதிகாரிகளின் சோதனையில் ரூ.82 லட்சம் ரொக்கம், 300 கிராம் தங்கம், ஆயிரம் சிங்கப்பூர் கரன்சி மற்றும் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறும்போது, ``இலங்கையிலிருந்து குருவியாக சென்னைக்கு வந்து ஹவாலா பணத்தைப் பரிமாற்றம் செய்துவிட்டு செல்வதற்கு ஏதுவாக மண்ணடி பகுதியில் இயங்கி வரும் சில தனியார் லாட்ஜ்கள் உதவியுள்ளன. ஒரு வங்கிக் கணக்குக்கு மொத்தமாகப் பணம் செலுத்தும்போது அது வருமான வரித்துறை, வங்கி அதிகாரிகள் கவனத்துக்குச் சென்று சந்தேகத்தை ஏற்படுத்தும்.
இதைத் தவிர்க்க ஏதுவாக பல்வேறு தனி நபர்களிடம் சிறிய தொகையாக இந்த பணத்தைக் கொடுத்து அவர்கள் குறிப்பிட்ட ஒரு வங்கிக் கணக்குக்கு இந்த பணத்தைச் செலுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மற்றும் புலனாய்வு நடைபெற்று வருகிறது'' என்றனர்.