மதுரை: மதுரையில் ரூ.114 கோடியில் நடந்து வந்த கலைஞர் நூலகக் கட்டுமானப் பணிகள் 16 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளன என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடியில் கலைஞர் நூலகம் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகக் கட்டுமானப்பணி 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்த நாளில் திறக்கப்பட உள்ளது. கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கலைஞர் நூலகம் தரைத் தளத்துடன் கூடிய 6 மாடிக் கட்டிடமாக 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை சார்பில் 16 மாத காலத்துக்குள் சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருக்கின்ற ஆய்வாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர், பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் என அனைவருக்கும் இந்நூலகம் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் கட்டப்பட்டுள்ளது.
இந்நூலகத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் தமிழ் புத்தகங்கள், 2 லட்சத்து 75 ஆயிரம் ஆங்கிலப் புத்தகங்கள், 6 ஆயிரம் இ-புத்தகங்கள் வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பழங்கால ஓலைச்சுவடிகள் காட்சிப்படுத்தியதைப் போன்று இந்த நூலகத்திலும் பழங்கால ஓலைச்சுவடிகளைப் படிப்பதற்காக காட்சிப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
மதுரைக்கு நேற்று வருகை தந்த தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது அவர், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு நேர்மையாக லஞ்சம், லாவண்யமின்றி செயல்படவேண்டும் என, முதல்வர் மு.க. ஸ்டாலின் விரும்புகிறார்.
அதில் உறுதியாகவும் இருக்கிறார். நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை மூலம் நடக்கும் அனைத்து புதிய பணிகளிலும் தரம் பரிசோதிக்கப்படுகிறது. குறைபாடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய திட்ட மதிப்பீட்டில், ஒவ்வொரு பணியிலும் தரமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவா? என ஆய்வு செய்கிறோம்.
சில தினங்களுக்கு முன், குளத்தில் மூழ்கி உயிரிழந்த அர்ச்சகர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியை அரசு வழங்கவேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
அர்ச்சகர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு சட்டசபையில் முதல்வர் தலைமையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அரசு ஒரு அளவுகோல் வைத்துள்ளது. அதன்படியே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்க முடியும். சம்பவத்தைப் பொருத்து, முதல்வர் அதற்கான நிதியுதவியை அறிவிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.