நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதா குடும்பத்துக்கு அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரின் ஒரு மாத சம்பளம் ரூ.10 லட்சம் மற்றும் கட்சியிலிருந்து ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சம் நிதியுதவியை அவர் அனிதாவின் குடும்பத்தினரிடம் வழங்கினார். இந்த நிகழ்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் இருந்தார்.
அரியலூரைச் சேர்ந்தவர் மாணவி அனிதா. நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதால் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி (செப்.1) தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று குரல் கொடுத்தவர் அனிதா.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்ததால் அனிதா தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தையே உலுக்கியது. இதனையடுத்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குகோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், அனிதா மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நிதியுதவியை ஏற்றுக்கொள்ள அனிதா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்றபின்னர் அரசு நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதாகக் கூறினர். அதேவேளையில், திமுக சார்பில் வழங்கப்பட்ட நிதியுதவியை அனிதா குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில், இன்று (செப்.30) அனிதா குடும்பத்துக்கு அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள அனிதாவின் வீட்டுக்கு அவர் நேரில் சென்று நிதியுதவி வழங்கினார்.
தேர்தல் கூட்டணி அல்ல..
டிடிவி தினகரனும் திருமாவளவனும் இணைந்து அனிதாவின் வீட்டுக்கு வந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், "தேர்தல் கூட்டணி என்பது வேறு, தமிழக பிரச்சினைகளுக்காக கூடுவது என்பது வேறு. சமூக பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகள் வேறுபாடுகளைக் கடந்து கூடவேண்டும்" என்றார்.