தமிழகம்

கவுன்சிலர் வார்டு மேம்பாட்டு நிதியில் மாநகராட்சி பூங்காக்களை பராமரிக்க அறிவுரை

செய்திப்பிரிவு

சென்னை: கவுன்சிலர்கள் வார்டு மேம்பாட்டு நிதியில்மாநகராட்சி பூக்காக்களை பசுமையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் தற்போது 786 பூங்காக்கள், 104 சாலை மையத் தடுப்பு பூங்காக்கள், 113 போக்குவரத்து தீவுத்திட்டு பூங்காக்கள் மற்றும் 163 சாலையோரப் பூங்காக்கள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த 786 பூங்காக்களில் ஒப்பந்த முறையில் 584 பூங்காக்களும், 145 பூங்காக்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலமும், 57 பூங்காக்கள் பொதுமக்கள் தத்தெடுப்பு முறையிலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இப்பூங்காக்களை சீரமைத்து, பொதுமக்களுக்கு மனநிறைவையும், மகிழ்வையும் தரும் வகையில் மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, அனைத்து பூங்காக்களும் பசுமையாகக் காட்சியளிக்கும் வகையில் மரக்கன்றுகள், செடிகள் நடுதல், புல்வெளிகள் அமைத்தல், ஒவ்வொரு பூங்காவிலும் 50 முதல் 100 எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் நாட்டு மரக்கன்றுகளை அந்தந்த வார்டு கவுன்சிலர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் முன்னிலையில் நடுதல், பூங்காக்களில் உள்ளவிளையாட்டு உபகரணங்கள் பயன்பாட்டில் இருக்கும் வகையில் அதிலுள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்தல், பூங்கா மேம்பாட்டுப் பணிகளை கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT