சென்னை மூவரசம்பட்டு குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் 5 பேர் உயிரிழந்ததையடுத்து, அந்த குளம் மூடப்பட்டு பொதுமக்கள் செல்ல தடை விதித்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சர்வ மங்கள தேவி சமேத தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது.படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

இளம் அர்ச்சகர்கள் 5 பேர் உயிரிழப்பு; தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாது: அமைச்சர் சேகர்பாபு உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை நங்கநல்லூரில் 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததற்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாது என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதியளித்தார்.

சென்னை நங்கநல்லூர் மூவரசம்பட்டியில் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்ற 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டு, உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, நேரமில்லா நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுப்பதுடன், இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, “கோயில் நிகழ்வுகளின்போது தீயணைப்புத் துறையினர், ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார்.

இதேபோல, ஜி.கே.மணி (பாமக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), வி.பி.நாகைமாலி (மார்க்சிஸ்ட் கம்யூ.), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூ.), தி.வேல்முருகன் (தவாக), ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோரும், இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் அரசுப் பணி வழங்குமாறும் வலியுறுத்தினர்.

இவற்றுக்குப் பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: அந்தக் குளம் கோயிலுக்குச் சொந்தமானதல்ல; உள்ளாட்சி அமைப்பின் பராமரிப்பில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாகத்தான் அங்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

2021-ல் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் செலவில் குளத்தைச் சுற்றிலும் நடைபாதையை அமைத்துக் கொடுத்தார்.

இக்கோயில் சர்வமங்களா சேவா அறக்கட்டளை நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படுகிறது. 2022-ல் அறநிலையத் துறை அனுமதியின்றி கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையறிந்து, அறநிலையத் துறை சார்பில் கோயிலுக்கு தக்கார் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து, கோயில் நிர்வாகத்தினர், அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதற்கான விசாரணை வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், உயிரிழப்பு சம்பவம் குறித்து அறிந்ததும், முதல்வர் எங்களை அழைத்து, இவ்வாறு நிகழ்வதற்கு ஏன் அனுமதித்தீர்கள் என்று எங்களைக் கண்டித்தார்.

கோயில் நிர்வாகத்தினர் தீர்த்தவாரி நிகழ்வு குறித்த தகவலை அறநிலையத் துறையிடம் தெரிவிக்கவில்லை. எனினும், சம்பவம் குறித்து அறிந்ததும், முதல்வர் உடனடியாக மாவட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசனை அனுப்பிவைத்தார். அவர் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், உடல்களைப் பெற்று, அடக்கம் செய்யும்வரை உடன் இருந்துள்ளார். மேலும், முதல்வர் அறிவித்த ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையையும் வழங்கியுள்ளார்.

இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது தடுக்க, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது, கோயில் நிர்வாகங்கள் அறநிலையத் துறையிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முதல்வர் அறிவித்த நிவாரணம் போதாது என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே உள்ள நடைமுறைகள்படி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த குடும்பங்களுக்கு முதல்வர் தேவையான உதவிகளை செய்வார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT