தமிழகம்

புதிய குடும்ப அட்டை பெற ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்: பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: புதிய குடும்ப அட்டை அல்லதுகுடும்ப அட்டையின் நகல் பெறுவதற்கு ஆன்-லைனில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டைக்காக வட்டாட்சியர் அலுவலத்திற்கு செல்லவோ, இடைத்தரகர்களை அணுகவோ தேவையில்லை என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: புதிய குடும்ப அட்டைகள், விண்ணப்பித்த 15 நாட்களில் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதன்படி, கடந்த 23 மாதங்களில் 11 லட்சத்து 20 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைகளில் 12 லட்சத்து 84 ஆயிரம் குடும்ப அட்டைகள் முன்னுரிமை அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் 41 லட்சத்து 68,292 பேர் பயனடைகின்றனர்.

புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு இனிமேல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ அல்லது இடைத்தரகர்களையோ மக்கள் அணுகத் தேவையில்லை. புதிய குடும்ப அட்டை அல்லது குடும்ப அட்டை நகல் பெறுவதற்கு ஆன்-லைனில் குறைந்த கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டை வீட்டுக்கே வந்து சேரும்.

ரத்தசோகை உள்ளவர்களின் நலனுக்காக விட்டமின், இரும்புச்சத்து, நுண்ணூட்டச் சத்து உள்ள செறிவூட்டப்பட்ட அரிசியைஅனைத்து ரேஷன் கடைகளிலும் ஏப்.1 முதல் விநியோகிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிப்பதற்கான வசதியை அரவை ஆலைகளில் ஏற்படுத்த வேண்டியிருப்பதால் வரும் ஜூன் மாதம் வரை மத்திய அரசிடம் கால அவகாசம் கேட்டுள்ளோம். இந்த அரிசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

பயோ மெட்ரிக் முறையில்... தமிழகத்தில் 35,941 நியாய விலைக் கடைகளில் பயோ மெட்ரிக், கண் கருவிழி என இருமுறையில் பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். டெல்டா மாவட்டங்களில் 65 ஆயிரம் மெட்ரிக் டன்கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புகிடங்குகள் ரூ.45 கோடியில்அமைக்கப்படும் இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.

SCROLL FOR NEXT