தமிழகம்

ஏப்ரல் 16 முதல் தாம்பரம் - செங்கோட்டை இடையே புதிய அதிவேக ரயில்

செய்திப்பிரிவு

காரைக்குடி: திருவாரூர், காரைக்குடி வழியாக சென்னை தாம்பரம் - செங்கோட்டை இடையே, ஏப்.16-ம் தேதி முதல் புதிதாக அதிவேக ரயில் இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரயிலை, நாளை (ஏப்.8) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அதன்பின், இந்த ரயில் ஏப்.16 முதல் மே 29-ம் தேதி வரை வாராந்திர ரயிலாக இயக்கப்படும்.

இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படுகிறது. திங்கட்கிழமை அதிகாலை 4.58 மணிக்கு காரைக்குடியை அடைகிறது. பின்னர், காலை 10.50 மணிக்கு செங்கோட்டையை அடையும்.

மறுமார்க்கமாக, செங்கோட்டையிலிருந்து திங்கட்கிழமை மாலை 4.15 மணிக்கு புறப் பட்டு, இரவு 9.33 மணிக்கு காரைக்குடியை அடைகிறது. செவ்வாய்க்கிழமை காலை 6.05 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

வாரந்தோறும் ஒரு முறை இயக்கப்படும் இந்த ரயில், ஜூன் மாதத்திலிருந்து வாரத்தில் மூன்று நாட்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தாம்பரத்திலிருந்து ஞாயிற்றுக் கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய மூன்று தினங்களும், மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து திங்கள்கிழமை. புதன் கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று தினங்களும் இந்த ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT