சென்னை: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என்ற கருத்து எழுந்தபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பினார்.
இதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி, அனைத்து கட்சியினரையும் அழைத்துச் சென்று, அப்போதைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்தோம். பின்னர், சட்டத் திருத்தம் மேற்கொண்டு, 69 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக அரசு உறுதி செய்தது. திக தலைவர் கி.வீரமணி, சமூகநீதி காத்த வீராங்கனை என்று ஜெயலலிதாவுக்கு பட்டமளித்தார்.
ஆனால், கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது, இடஒதுக்கீட்டை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. சமூக நீதியைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, சமூக நீதி மாநாட்டை நடத்துகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் 500, 1000 தொண்டர்கள்தான் இருப்பார்கள்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது. மேலிடத்தில் இருப்பவர்கள்தான் கூட்டணியை முடிவு செய்வார்கள். அவர்கள் கூட்டணியை உறுதி செய்துள்ளனர். எனவே, பாஜக மாநிலத் தலைவரின் கருத்தை ஏற்க முடியாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.