தமிழகம்

ஓசூர் பகுதியில் 300 ஹெக்டேரில் கேரட் சாகுபடி: நிலையான வருவாயால் விவசாயிகள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

ஓசூர்: வடமாநில சந்தைகளில் வரவேற்பு உள்ளதால், ஓசூர் பகுதியில் விவசாயிகள் சுமார் 300 ஹெக்டேர் பரப்பளவில் கேரட் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிலையான வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ஆவலப்பள்ளி, பேரிகை தளி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதுடன், நல்ல மண் வளம் உள்ளதால், மலை நிலவளம் மற்றும் குளிர் பிரதேசங்களில் விளையும் காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

சந்தை வாய்ப்பு: சந்தைகளில் ஆண்டு முழுவதும் கேரட் விலை நிலையாக உள்ளதால், ஓசூர் பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் கேரட் சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.

ஓசூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 300 ஹெக்டர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் கேரட் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும், வடமாநிலங்களில் சந்தை வாய்ப்புள்ளதாலும், நிலையான வருவாய் கிடைப்பதாலும் விவசாயிகள் ஆர்வமுடன் கேரட் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சொட்டு நீர் பாசனம்: இதுதொடர்பாக விவசாயி மஞ்சு கூறியதாவது: ஓசூர் பகுதியில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மற்றும் நல்ல மண் வளம் மூலம் சொட்டு நீர் மற்றும் தண்ணீர் தெளிப்பு மூலம் கேரட் விவசாயத்தில் அதிக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு ஏக்கர் கேரட் சாகுபடிக்கு ரூ.50 ஆயிரம் செலவாகிறது. மகசூலைப் பொறுத்தவரையில் 5 டன் வரை கிடைக்கும். ஒரு டன்னுக்கு ரூ.15 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதால், அதிகபட் சமாக ரூ.1 லட்சம் வரை வரு மானம் கிடைக்கிறது.

பல்வேறு உணவுகள்: தமிழகத்தைப் பொறுத்தவரை அன்றாட சமையலில் மட்டுமே கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது.

வடமாநிலங்களில் கேரட் அல்வா, கேரட் ஜூஸ் ,கேரட் சட்னி, கேரட் சாதம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். இதனால், இங்கு விளையும் கேரட் தமிழகத்தை விட வட மாநில சந்தைகளுக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT