ஆடிப் பெருக்கு விழாவையொட்டி மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயம் செழிக்க வேண்டி காவிரி அன்னைக்கு மலர்தூவி வணங்கும் ஆடிப்பெருக்கு விழா, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவை சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி பகுதி மக்களிடம் இருந்தும் விவசாயிகளிடம் இருந்தும் எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
மேட்டூர் அணையில் இருந்து, தற்போது குடிநீருக்காக 800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு, நீர் வரத்து ஆகிய வற்றை கருத்தில் கொண்டு, காவிரி பகுதி மக்கள் மகிழ்ச்சி யுடன் ஆடிப்பெருக்கை கொண் டாடும் வகையில் 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை அணை யில் இருந்து கூடுதலாக வினாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட உத்தர விட்டுள்ளேன்.