சென்னை: சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள், மாநகராட்சிகளில் ‘பெல்ட்’ பகுதிகளுக்குப் பட்டா வழங்குவது குறித்து முதல்வருடன் பேசி சாதக, பாதகங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நடைபெற்ற விவாதம்: கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி) : கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 500 குடும்பங்கள் நிரந்தர வீடு கட்டி 60 ஆண்டுகளாக வசித்துவரும் நிலையில் பட்டா வழங்கப்படவில்லை. பட்டா வழங்கப்படுமா?
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிறது. இது `பெல்ட்' பகுதியில் வருவதால் பட்டா வழங்கப்படாமல் உள்ளது. குடியிருப்புப் பகுதி எந்தப்பிரிவில் உள்ளது என்பதைப் பார்த்துநடவடிக்கை எடுக்கலாம்.
அருள் (பாமக): சேலம் மாநகராட்சியில் 8 கிமீ சுற்றளவுக்குப் பட்டாவழங்கக்கூடாது என்ற விதி உள்ளதாம். இது அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் பிரச்சினையாக உள்ளது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக வசித்து வரும் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு உள்ளது. அவர்களுக்குப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் ராமச்சந்திரன் : 1962-ம் ஆண்டிலேயே சென்னை உள்ளிட்ட பல மாநகராட்சி பகுதிகளில் பெல்ட் பகுதி எனக் குறிப்பிட்டு பட்டா வழங்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். நீதிமன்ற உத்தரவும் அப்படியாகத்தான் உள்ளது. அது தொடர்பாகத் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டியுள்ளது.
கணபதி (மதுரவாயல்): 2006-11-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி ஆட்சியில் கிராம நத்தம் மனைகளுக்குப் பட்டா வழங்கப்பட்டது. பல லட்சம் மக்கள் இதனால் பலனடைந்தனர். இன்று சென்னையைச் சுற்றியுள்ள 32 கிமீ தொலைவு பெல்ட் பகுதி எனக் குறிப்பிட்டு பட்டா கிடையாது என்று கூறி வருகின்றனர். ஏழை மக்கள் பயன்பெறும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பெல்ட் பகுதி என வரும் சட்டத்தை எடுத்துவிடலாம். சென்னையைச் சுற்றியுள்ள இணைக்கப்பட்ட பகுதிகளில், இன்று பட்டா வழங்க மறுக்கப்படுகிறது.
நிதானமாகத்தான் முடிவு: அமைச்சர் ராமச்சந்திரன்: பெல்ட்பகுதியில் பட்டா வழங்கக் கூடாது என 1962-ம் ஆண்டிலேயே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படிசென்னையைச் சுற்றி 4 மாவட்டங்களில் இந்த பிரச்சினை வருகிறது. இந்த சட்டங்கள் இருப்பதால் பல வகைகளில் இடைஞ்சல்வருகிறது. எனவே, பட்டா வழங்குவதில் உள்ள பிரச்சினைகள், எத்தனை ஆண்டுகள் வசித்தவர்களுக்கு வழங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
30,40 ஆண்டுகளாகக் குடியிருப்பவர்கள் தவிர தற்போதும் 4 ஆண்டுகளில் ஆக்கிரமித்துக் குடியிருப்பவர்களும் இருக்கிறார்கள். இதைஅரசு கவனத்தில் கொண்டு பரிசீலித்து முடிவெடுக்கப்படும். இதில்நிதானமாகத்தான் முடிவெடுக்கப்படும். முதல்வரிடம் பேசி சாதக பாதகங்களை ஆராய்ந்துதான் முடிவெடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.