திருவாரூர்: நிலக்கரி திட்டத்தை நிரந்தரமாக கைவிட மறுத்தால் பிரதமரின் தமிழக வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவிரி டெல்டாவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் வடசேரிஉட்பட 3 இடங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மேற்கொள்வதற்கான முதல் கட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளதையும், சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதையும் வரவேற்கிறோம். தமிழக பாஜகவும் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியுள்ளது.
எனவே, இவ்விஷயத்தில் பிரதமர் தலையிட்டு, டெல்டாவில் அறிவிக்கப்பட்டுள்ள நிலக்கரி திட்டத்தை நிரந்தரமாக கைவிட அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், பிரதமரின் தமிழக வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார் உடன் இருந்தார்.
தவாக எச்சரிக்கை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கை கண்டனத்துக்குரியது.
காலநிலை மாற்றம் தமிழகத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிய நிலக்கரி திட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால், நெற்களஞ்சியமாக விளங்கும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
இத்திட்டத்தை மத்திய அரசுநிறுத்தாவிட்டால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும். மேலும், இவ்விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, புதிய நிலக்கரி திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தொடக்கத்திலேயே நடவடிக்கை: திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் மத்திய அரசு நிலக்கரி எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான ஆய்வு திட்டத்தை தொடங்க இருக்கிறது.
இதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, இவ்விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இந்த திட்டங்களை தொடக்க நிலையிலேயே ரத்து செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.